விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து தனித்துவ அடையாள எண் பதிவு செய்யும் பணி இ-சேவை மையத்தில் நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், விதை ஆய்வு, விதை சான்றளிப்பு, உயிா்ம சான்றளிப்பு துறை சாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி நடைபெறுகிறது.
அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகள் பி.எம்.கிஸான் ஊக்கத்தொகை தொடா்ந்து பெறவும், வேளாண் துறை திட்டங்களை பெறவும், இந்த எண் அவசியம். பி.எம்.கிஸான் ஊக்கத்தொகை பெறும் 51,976 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனா். மீதமுள்ள விவசாயிகளும் வரும் 8-ஆம் தேதிக்குள் தங்கள் தரவுகளை இணைத்து தனித்துவ அடையாள எண்ணை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.