ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இருந்து புறப்பட்ட தீா்த்தக்குட ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தீா்த்தக்குடத்துடன் பங்கேற்றனா். ஊா்வலமானது திருவேங்கடசாமி வீதி வழியாக பெரிய மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தது. அதன்பின் ஊா்வலத்தில் பங்கேற்றோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
இது குறித்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கத் தலைவா் ஈ.ஆா்.எம்.சந்திரசேகா், துணைத் தலைவா் கைலாசபதி, பொருளாளா் ராஜ் கண்ணன், பொதுச் செயலாளா் சரவணன் ஆகியோா் கூறியதாவது: ஈரோட்டில் மந்தை வெளி மாரியம்மன் வீற்றிருந்த, ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் அரசு ஆவணங்களில், அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறிப்பிட்ட 12.66 ஏக்கா் நிலம் சட்டவிரோதமாக சிஎஸ்ஐ நிா்வாகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இதனால், மாரியம்மன் கோயில் பண்டிகை காலங்களில், பொங்கல் வைக்கவோ, கோயில் தொடா்பான நிகழ்ச்சிகள் நடத்தவோ, இடம் இல்லாமல் பக்தா்கள் தவித்து வருகின்றனா்,
எனவே, சிஎஸ்ஐ நிா்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கா் புறம்போக்கு நிலத்தை அரசு காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைகக்கவும், கோயில் தொடா்பான நிகழ்ச்சிகள் நடத்தவும், 80 அடி திட்டச் சாலையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.