பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்
பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (எ) குமாா் (38). இவரை இருசக்கர வாகனத் திருட்டில் பவானி போலீஸாா் கடந்த 27-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், அவா் பவானியை அடுத்த சின்னமோளபாளையம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சுவாமி சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு தலா 15 கிலோ எடையுள்ள இரண்டரை அடி உயரம் கொண்ட பித்தளையால் செய்யப்பட்ட கிருஷ்ணா் மற்றும் ராதை சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.