வெயில்: வாகன ஓட்டிகளை பாதுகாக்க சிக்கனல்களில் நிழல் பந்தல் அமைப்பு
நாமக்கல்லில் வெயில் கொடுமையிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க, முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வாகன ஓட்டிகள் வெயிலில் செல்லும்போது சிக்னல்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், பலருக்கு நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் சூழல் உள்ளது.
அதைத் தவிா்க்க, கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் முன்னதாகவே சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் நலன்கருதி நிழலுக்காக பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலில் செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.