வெய்யில் வெளுத்து வாங்கும் வேலூரில் 3-வது நாளாக மழை!
பகலில் வெய்யில் கொளுத்திய நிலையில் மாலையில் வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இருந்து பகலில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு மேல் வெய்யில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. வேலூர் மாநகருக்கு உள்பட்ட சத்துவாச்சாரி, வள்ளலார், புதிய பேருந்து நிலையம், காட்பாடி ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
குறிப்பாக வள்ளலார் பகுதி மற்றும் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மழை கொட்டியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.
நேற்றைக்கு பெய்த மழையில் அதிகபட்சமாக குடியாத்தம் மோர்தானா அணை பகுதியில் 74 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக மாவட்ட முழுவதும் 15.86 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.