``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்ப...
பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்னையிலேயே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இரண்டாம் இடம், மூன்றாம் இடத்தில் இரண்டு மாணவிகள் என மூன்று மாணவிகள் இந்த பள்ளியில் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் வேல்முருகன் என்பவரின் மகள் மம்தா என்பவர் 588 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இந்த பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இதேபோன்று பாரதி நகர்ப் பகுதியில் வசிக்கும் புகழேந்தி என்பவரின் மகள் பூஜா மற்றும் வியாசர்பாடியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் மகள் ரோஷினி ஆகிய இருவரும் 583 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதே பள்ளியில் இந்த மாணவி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்ற மேற்கண்ட மூன்று மாணவிகளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, வீடு மற்றும் பள்ளிகள் படிப்புக்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், பள்ளி ஆசிரியர்கள் கடைசிவரை பல்வேறு உதவிகளைச் செய்து எங்களது வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களைப் போல பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு உயர்கல்வி பெற உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.