ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!
துவாக்குடியில் ரூ. 56.47 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
திருச்சி, துவாக்குடியில் ரூ. 56.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ. 19.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தையும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 8) திறந்து வைத்தார்.
அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு பல முன் மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் போக்கவும், அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை ஊக்கப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த மாதிரிப் பள்ளிகளில் உண்டு உறைவிட வசதியுடன் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் விளைவாக முதலாம் ஆண்டிலேயே 75 மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடம் கிடைத்தது.
2022-23ஆம் ஆண்டில் மேலும் 15 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு 274 மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. அத்துடன் இரண்டு மாணவிகள் தாய்வான் நாட்டின் முழு கல்வி உதவித் தொகைப் பெற்று அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கச் சென்றனர்.
தொடர்ந்து, 2023-24-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களும், JEE, NEET மட்டுமல்லாது NIFT, CUET, CLAT என 20 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கும் தயார் படுத்தப்பட்டனர். இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்த ஆண்டு 628 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது.
இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 977 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துள்ளது. இதில் 14 மாணவர்களுக்கு ஐஐடி-யிலும் 157 மாணவர்களுக்கு நாடெங்கிலும் உள்ள என்ஐடி-களிலும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசுக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரிப் பள்ளிகளுக்கு நிரந்தர இடம் அமைக்கும் பொருட்டு, கடந்த 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல் கட்டமாக திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 56.47 கோடி ரூபாய் செலவில் புதியக் கட்டடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான இடம் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒதுக்கப்பட்டு, தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 54,676 சதுர அடி கட்டட பரப்பளவில் ரூ. 19.65 கோடி செலவில் வகுப்பறைகள், பணியாளர் அறை, நூலகம், பல்நோக்கு அறை, கழிவறைகள், விளையாட்டுத் திடல், கலையரங்கம், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 73,172 சதுர அடி பரப்பளவில் தலா ரூ. 18.91 கோடி செலவில், சுமார் 440 மாணவர்கள் மற்றும் 440 மாணவியர்கள் தங்குவதற்குரிய தனித்தனி விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். பின்னர், அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், கலையரங்கம், கணினி ஆய்வகம் போன்றவற்றை பார்வையிட்டதோடு, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடினார்.
இதையும் படிக்க: போர்ப் பதற்றம்: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்!