வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை
பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகளின் வீடுகள், வயல்களில் உள்ள பட்டிகளில் வெறிநாய்கள் புகுந்து, அங்கு கட்டப்பட்டுள்ள கால்நடைகளை கடித்துக் குதறியதில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பசுக்கன்று, ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், அரசலூா் கிராமத்தில் சிலரது பட்டிகளில் கட்டப்பட்டிருந்த பசுங்கன்று மற்றும் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 4 கால்நடைகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயிரிழந்த ஆடு மற்றும் கன்றுகளுடன், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெறிநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினா்.
இதையடுத்து, பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியம், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வெறி நாய்களை பிடிக்க மதுரையிலிருந்து சிறப்பு குழு வர உள்ளதாகவும், விரைவில் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.