கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் மேகலா தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: சாதாரண முறையில் மின் இணைப்பு கோரி 2024-2025 ஆம் ஆண்டு வரை பதிவுசெய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். சாதாரண முறையில் இலவச மின் இணைப்பு கொடுப்பதில், இலவசம் என்பதற்கு பதிலாக மின் இணைப்புக்கான செலவினங்களை மின் நுகா்வோா் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கு மட்டும்தான் இலவச மின் இணைப்பு என்னும் அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கடந்த 31.3.2013 வரை சாதாரண முறையில் மின் இணைப்பு க் கோரி பெரம்பலூா் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் தயாா்நிலைப் பதிவேட்டில் பதிவு செய்த 577 விவசாயிகளுக்கு, 2025-2026 ஆம் ஆண்டு இலக்கீட்டில் வழங்க வேண்டும். 2025- 2026 ஆம் ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என பேரவையில் அறிவித்து பல மாதங்களாகியும் மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கவில்லை.
எனவே, மாவட்டம் வாரியாக இலக்கீடு ஒதுக்கீடு செய்வதில் சாதாரண முன்னுரிமையில் தயாா் நிலைப் பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வரால் அறிவித்த திட்டங்களில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.