தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
வெற்றிகள் கிடைக்க...
தாமிரவருணி கரையில் சிறப்புமிக்கத் தலங்களில் வெள்ளூர் நடுக்கர் கோயில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட நவலிங்கபுரங்களில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில், பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் அமைந்துள்ளன. பசுமைநிறைந்த கிராமத்துக்குள்ளே நீர்சுனைகள் கொண்ட தெப்பக்குளத்தின் பின்புறம் பிரம்மாண்டமாக சிவன் கோயில் உள்ளது. இங்கு சிவனை முருகன் வழிபட்டுள்ளார். இந்த ஊர் "வேல்லூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி "வெள்ளூர்' என அழைக்கப்படுகிறது.
இரண்டு சிவனடியார்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்ற வழக்கு ஏற்பட்டது. இதை யாராலும் தீர்க்க முடியாத நிலையில், சிவன் துறவி போல் தோன்றி விசாரித்து, "பக்தியில் இருவரும் சரிசமமானவர்களே' என்று தீர்த்து வைத்தார். துறவி வடிவில் இறைவன் வந்து தீர்ப்பு அளித்ததால், "மத்தியபதீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். இந்த ஊர் "வேலூரான மதுரோதையபுரம்' என்றும் "வெள்ளூரான மதுரோதைய
புரம்' என்றும் இரண்டு வகையான பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன.
பாண்டிய மன்னர் கால வீரபாண்டிய சடவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புடைய இந்தக் கோயிலில் மீன் சின்னங்கள் கோயில் மண்டபங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. வேல் சின்னம் உருவங்களும், வேலூர் என்பதின் அடையாளமாகக் காணப்படுகிறது. 934}இல் இந்தக் கோயில் கட்டப்பட்டு 1091 ஆண்டுகள் பெருமையும், பழைமையும் வாய்ந்தது.
ஒளி வடிவமானவர் "நக்கர்' என்ற பொருளுக்கேற்ப மூலவர் நடுக்கர் சந்நிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை பக்தர்கள் உணர்கின்றனர். புதுக்குடியில் உள்ள வடநக்கர் கோயில் சிதைவுற்றதால், அங்குள்ள மூலவர் இந்தக் கோயிலின் இடதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு மூலையில் "கங்கை அம்மன்' என்ற துர்க்கையின் கற்சிற்பம் உள்ளது. "கோயிலில் வழிபட இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் உள்ளிட்டவை கிடைக்கும். தலையில் கிரிடத்துடன் காணப்படும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், வெற்றிகள் கிடைக்கும்' என்பது ஐதீகம்.
கோயிலின் மாசித் திருவிழா} தெப்பத் திருவிழா பிப். 28}இல் தொடங்கி, மார்ச் 12 வரை நடைபெறுகிறது. மார்ச் 8}இல் தேரோட்டமும், 10, 11}ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தி.நந்தகுமார்