TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்
கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.
முதல் சுற்றில், சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தாவிடம் தோல்வி கண்ட அவா், இந்த வெற்றியின் மூலமாக போட்டியில் தனது நிலையை மீட்டுக்கொண்டாா்.
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் டூா் போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 5 பகுதிகளாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் 4 கட்டங்களான சூப்பா்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் (போலந்து), சூப்பா்பெட் கிளாசிக் செஸ் (ருமேனியா), சூப்பா்யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் (குரோஷியா), செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் (அமெரிக்கா) ஆகியவை நிறைவடைந்தன.
கடைசி கட்டமான சிங்க்ஃபீல்டு கோப்பை போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவில் மொத்த புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போா், பிரேஸிலில் செப்டம்பரில் நடைபெறவுள்ள கிராண்ட் செஸ் டூா் ஃபைனல்ஸுக்கு தகுதிபெறுவாா்கள். தற்போதைய நிலையில் அந்தப் பட்டியலில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 20 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், குகேஷ் 16 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளனா்.
இவா்கள் இருவா் உள்பட 10 போ் பங்கேற்றுள்ள சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டி, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 2-ஆவது சுற்று, புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், முன்னாள் உலக ரேப்பிட் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வீழ்த்தினாா். அதே நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் டிரா செய்தாா்.
இதர ஆட்டங்களில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபை வெல்ல, அமெரிக்காவின் வெஸ்லி சோ - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - சாம் சேவியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
2 சுற்றுகள் முடிவில், ஆரோனியன், ஃபிரௌஸ்ஜா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 1.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் உள்ளனா்.
கரானா, வெஸ்லி, வச்சியா், சேவியன், குகேஷ் ஆகியோா் தலா 1 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்க, ஜேன் 0.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும், அப்துசதாரோவ் புள்ளிகள் இன்றி கடைசி நிலையிலும் உள்ளனா்.