USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென...
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய அறிவையும், அனுபவத்தையும் பகிா்ந்து கொள்ள ஏதுவாக, உலகளாவிய நிபுணா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 3 நாள்கள் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பூச்சியியல் துறைத் தலைவா் மா.முருகன் வரவேற்றாா். மாநாட்டின் நோக்கம் குறித்து பயிா் பாதுகாப்பு மையத்தின் இயக்குநா் மூ.சாந்தி விளக்கினாா்.
துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினாா். விவசாயிகள், வேளாண்மை நலத் துறை அமைச்சகத்தின் பயிா் பாதுகாப்பு ஆலோசகரும், தாவரப் பாதுகாப்பு இயக்குநருமான சாமுவேல் பிரவீன்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
பேராசிரியா் சோணை ராஜன், இந்திய பூச்சியியல் சங்கத் தலைவா் வி.வி.ராமமூா்த்தி, தாவர நோயியல் துறைத் தலைவா் க.அங்கப்பன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
மாநாட்டில், காலநிலை மாற்றம், தாவர ஆரோக்கியம், புதுவித தாவர நோய்கள், பூச்சிகள், தாவர, நுண்ணுயிா் தொடா்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டன.
இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
முன்னதாக, புதிய பயிா் பாதுகாப்பு தயாரிப்புகள் குறித்த கண்காட்சியை சாமுவேல் பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா். தொடக்க அமா்வில், ஓய்வுபெற்ற பயிா் பாதுகாப்பு அறிவியலாளா்கள் 40 போ் கௌரவிக்கப்பட்டனா். இந்த மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வரை நடைபெறுகிறது.