வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் மதன் லால் திறமையானவர்தான் ஆனால் ஒழுக்கம் தேவை எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் (14) சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் நிகழ்த்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார்.
இந்தச் சாதனையைப் பாராட்டும் விதமாக பிகார் முதல்வர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை அளித்தார்.
இந்தமாதிரி ஒரு சிறுவனைப் பார்த்ததே இல்லை
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசியதாவது:
வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமையானவர். ஆனால், திறமை மட்டுமே வெற்றியைக் கொடுத்துவிடாது.
அவர் கவனமாக, ஒழுக்கமாக, கடினமாக உழைக்க வேண்டும். அவரது செயல்பாடுகள் சரியான வழியில் இருந்தால் பல உயரங்களை அடையலாம்.
நான் இந்தமாதிரி ஒரு சிறுவனைப் பார்த்ததே இல்லை. நான் தில்லிக்கு கேப்டானக இருக்கும்போது ரஞ்சி கோப்பையில் சச்சின் சிறிய வயதில் எங்களுக்கு எதிராக 80 ரன்கள் குவித்தார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்
சச்சினுக்கு அடுத்தாக விராட் கோலி வந்தார். இன்னமும் விளையாடி வருகிறார். தற்போது, அனைவரும் சூர்யவன்ஷியைக் குறித்துப் பேசுகிறார்கள். சூப்பர்ஸ்டாராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது.
சூர்யவன்ஷி பேட்டிங் ஆடும் விதம் கடவுள் கொடுத்த வரம். ஆனால், இதை எப்படி பயன்படுத்துவது என்பது அவரிடம்தான் இருக்கிறது. இதில் அவரது நேர்மை, ஒழுக்கம், வளர்ப்பு என எல்லாமே அடங்கியிருக்கிறது. குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது. குடும்பத்தினர் ஆதரவாக இருக்கும்போது அது கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.
முடிந்த அளவுக்கு உள்ளூர் போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும். வித்தியாசமான சூழ்நிலைகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடினால் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.