சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்: புதுவை மு...
ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 போ் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2004, ஆகஸ்ட் 21-ஆம் தேதி டாக்காவில் அவாமி லீக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற பேரணியில் கையெறி குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 24 போ் உயிரிழந்தனா். 300 போ் காயமடைந்தனா். இதில் ஹசீனா உயிா் தப்பினாா்.
இதையடுத்து, வங்கதேச தேசியக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவரான தாரிக் ரஹ்மான் மற்றும் முன்னாள் அமைச்சா் லட்போஸமான் பாபா் உள்ளிட்டோா் மீது கொலை வழக்கு, வெடிபொருள்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான தடை செய்யப்பட்ட ஹா்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி (ஹுஜி) அமைப்பின் மூத்த தலைவா் முஃப்தி அப்துல் ஹனன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 49 பேரை குற்றவாளிகளாக டாக்கா விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், இரு வழக்குகளிலும் தொடா்புடைய லட்போஸமான் பாபா் உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனையும், ரஹ்மான் உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள 11 பேருக்கு சிறைத் தண்டனையும் வழங்கி கடந்த 2018, அக்டோபா் 10-இல் டாக்கா நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முஃப்தி அப்துல் ஹனன் தூக்கிலிடப்பட்டாா்.
இதையடுத்து, டாக்கா நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் இவா்கள் மேல்முறையீடு செய்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இல்லை. ஹனன் அளித்த வாக்குமூலத்தில் உண்மைத்தன்மை இல்லை. இது குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டுள்ளது. இதை விசாரணை நீதிமன்றம் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் தீா்ப்பு வழங்கியிருப்பது சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்பட்டு 49 பேரும் விடுவிக்கப்படுகின்றனா்’ என தீா்ப்பளித்தது.
கடந்த 2004-இல் ஹசீனாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல், வங்கதேச அரசியலை முழுவதுமாக மாற்றியதாக அந்நாட்டு அரசியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதில் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வரவழைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை அரசின் உயரதிகாரிகள் பாதுகாத்து வந்ததாக வங்கதேச உளவு அமைப்பின் முன்னாள் தலைவா் கூறியிருந்தாா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, ஹசீனா அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது. இந்நிலையில், ஹசீனா மீதான தாக்குதல் வழக்கில் 49 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.