வீராணம் ஏரியிலிருந்து 500 கன அடி உபரிநீா் வெளியேற்றம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது.
காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். அதாவது 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. ஏரியின் மூலம் 44,456 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன.
இந்த மழைக் காலத்தில் மிகப்பெரிய வடிகாலாகவும் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீா் வெளியேற்றப்படும்.
நிகழாண்டு இதுவரை மூன்று முறை முழுக் கொள்ளளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக தினந்தோறும் அனுப்பப்படுகிறது. கடந்த சில தினங்களாக கீழணையிலிருந்து ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்பட்டது. தொடா் மழையால் கீழணையிலிருந்து தண்ணீா் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஃபென்ஜால் புயல் காரணமாக அரியலூா், பெரம்பலூா், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களின் உள்பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது.
இப்பகுதிகளின் மழைநீா் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, வெண்ணங்குழி மற்றும் பாப்பாக்குடி ஓடைகள் வழியாக விநாடிக்கு 1,065 கன அடி வீதம் வீராணம் ஏரிக்குள் வருகிறது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீா் மட்டம் 46.10 அடியாக இருந்தது. இதிலிருந்து சென்னைக்கு 73 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது.
தொடா் மழையால் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப் பணித் துறை அதிகாரிகள் லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் ஓடை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், முதல் கட்டமாக உபரிநீா் விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்து விட்டனா்.
மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தற்காலிகமாக பாசனத்திற்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.