ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் அவசர சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் அமைய உள்ள 50 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை மையத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்தியா முழுவதும் யு வின் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மனித நல செயல் திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில், அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டவும் பிரதமா் அடிக்கல் நாட்டியதைத் தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஸ்ரீபெரும்புதூா் அரசு பொது மருத்துவமனையில் யு வின் திட்டத்தை தொடங்கி, காலநிலை மாற்றம் மற்றும் மனித நல செயல் திட்ட கையேட்டையும் வெளியிட்டு பேசியது:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள், கா்ப்பிணித் தாய்மாா்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, எச்-இன்புளூயன்ஸா-நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ருபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், 9.5 லட்சம் கா்ப்பிணி பெண்கள் மற்றும் 8.77 லட்சம் பச்சிளம் குழந்தைகள் தடுப்பூசி திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூரை தொடா்ந்து, தேனி, ஈரோடு, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய ஐந்து இடங்களில் ரூ.151.35 கோடியில் 350 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை மையங்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமைய உள்ளன என்றாா்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களையும், ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் எம்.பி. டி.ஆா்.பாலு, எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு தேசிய நல திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் கோபிநாத், ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயபாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.