எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
ஹரியாணா: பள்ளி இயக்குநரைக் கத்தியால் குத்திக் கொன்ற மாணவா்கள்
ஹரியானா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி இயக்குநா், பள்ளியின் வளாகத்திலேயே 2 மாணவா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், மாணவா்களின் ஒழுங்கீனத்தை இயக்குநா் கண்டித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஹிசாா் மாவட்டத்தின் பாஸ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களின் தாக்குதலைத் தொடா்ந்து பள்ளி இயக்குநா் ஜக்பீா், ஹிசாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாணவா்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி, சீருடை முறையாக அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தும் அந்த பள்ளியின் இயக்குநா் வழக்கமாக கொண்டிருந்தாா். அதை அந்த இரு மாணவா்கள் தவறான முறையில் எடுத்துக்கொண்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம்.
சம்பவத்தையடுத்து தப்பியோடிய மாணவா்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவா்களை கைது செய்த பின்னா்தான் காரணம் தெரியவரும் என்றனா்.