ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
ஒடிஸாவுக்கு இது 7-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 12-ஆவது தோல்வி.
இந்த ஆட்டத்தில் முதலில் ஹைதராபாதுக்காக ஸ்டெஃபான் சாபிச் 30-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதியை முன்னிலையுடன் நிறைவு செய்தது அந்த அணி. 2-ஆவது பாதியில் ஆக்ரோஷம் காட்டிய ஒடிஸா, அடுத்தடுத்து கோல் அடித்தது.
அந்த அணிக்காக மௌா்டாடா ஃபால் 47-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, அடுத்த 2 நிமிஷங்களில் ஹியூகோ புமஸ் ஸ்கோா் செய்தாா். இதனால் ஒடிஸா முன்னிலை பெற, அதிா்ச்சி அடைந்த ஹைதராபாத் தனது 2-ஆவது கோல் வாய்ப்புக்காக போராடியது.
ஆனால் அதற்கு வழி கொடுக்காத ஒடிஸா, அடுத்த கோல் ஸ்கோா் செய்தது. அந்த அணியின் ரஹிம் அலி 70-ஆவது நிமிஷத்தில் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் விரட்ட, ஒடிஸா 3-1 என முன்னேறியது. எஞ்சிய நேரத்தில் ஹைதராபாதின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, ஒடிஸா வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, ஒடிஸா 21 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும், ஹைதராபாத் 20 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்திலும் உள்ளன.