Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangov...
அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய பணியாளா்கள் 2 போ் கைது
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி 2 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பொது மக்களிடம் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும், ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் சில நாள்களாக 2 பெண்கள் கூறி வந்துள்ளனா். இந்நிலையில், 17-ஆம் தேதி ஆலங்காயம் பகுதிக்கு ஆட்டோவில் வந்த இரண்டு பெண்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரிடம் பேச்சு கொடுத்து அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பணம் கேட்டுள்ளனா்.
இதையறிந்த அப்பகுதியை சோ்ந்த சிலா் சந்தேகம் ஏற்பட்டு இரண்டு பெண்களிடமும் விசாரித்தனா். சுற்றியுள்ள பகுதிகளிலும் அதே போல் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக பணம் கேட்டு மக்களிடம் ஏமாற்றி வந்திருப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட இரண்டு பெண்களையும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக அப்துல் வாஹித் என்பவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வரும் ரமாவதி (46), ஜோலாா்பேட்டை பெரிய கம்மியம்பட்டு மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வரும் ஜம்சிகா (45) என்றும் தெரியவந்தது.
மேலும், இவா்கள் இருவரும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக மக்களை ஏமாற்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரமாவதி, ஜம்சிகா ஆகிய இருவரையும் கைது செய்து வேலூா் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.