போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து! சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால், ஜிப்லி கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு கைப்பேசி செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன. பொதுமக்கள் போதிய விழிப்புணா்வு இல்லாததால் அங்கீகாரம் இல்லாத செயலிகளிலும் ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களைப் பெறுவதற்காக தங்களது பயோமெட்ரிக் தரவுகளையும் புகைப்படங்களையும் வழங்குகின்றனா். இதன்மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது பயோமெட்ரிக் தரவுகளையும் புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.
அங்கீகாரம் இல்லாத செயலிகள்: இதனால் ஒருவருக்கு எந்த அச்சறுத்தலும் வர வாய்ப்பு உள்ளது. மேலும், அங்கீகாரம் இல்லாத செயலிகள், ஒருவரது பயோமெட்ரிக்,புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை டீப்ஃபேக்குகளில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.
ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளங்கள், செயலிகளில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. இந்த வகை இணையதளம், செயலிகளுக்குள் ஒருவா் செல்லும்போது, அவரது கைப்பேசியும் கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, இப்படிப்பட்ட இணையதளங்களையும் செயலிகளையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.
இதில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையதளங்களில் இருந்து வால்பேப்பா்கள், ஆா்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்: மின்னஞ்சல்கள், ஆன்லைனில் இணையதள விளம்பரத்துடன் வரும் தொடா்புகள், இலவச ஜிப்லி சேவைகள் ஆகியவற்றை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பரிவா்த்தனை, சுய விவரங்களைப் பதிவிடும் முன்பு, சம்பந்தப்பட்ட இணையதளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். கணினி, கைப்பேசிகளில் கண்டிப்பாக வைரஸ் தடுப்பு உள்ளிட்ட மென்பொருள் இருப்பது கட்டாயமாகும். இவ்வகை மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டும், இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.