அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" - தவெக கேள்வி
சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம் விவகாரம் - தவெக பத்திரிகையாளர் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்திருக்கும் அஜித்குமார் என்ற இளைஞரின் காவல்நிலைய மரணம் தொடர்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.

அப்போது, "காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் தன்னை மனித உரிமைக் காவலராகக் காட்டிக் கொண்டார்.
FIR-யைப் பதிவு செய்யாமல் தனிப்படையினர் அழைத்துச் சென்று விசாரிக்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்தியிருக்கிறார்கள். இதைக் கடத்தலாகத்தான் பார்க்க முடியும்.
சாத்தான்குளம் சம்பவத்தை விடப் பல மடங்கு கொடூரமான சம்பவம் இது. சிவகங்கை சம்பவத்தை காவல் நிலைய மரணமாகப் பார்க்கவே முடியாது. இதைக் கடத்தல் மற்றும் படுகொலை வழக்காகத்தான் பார்க்க முடியும்.
மாவட்ட எஸ்.பி அளவில் உத்தரவு பிறப்பித்திருந்தால் மட்டுமே தனிப்படையினர் இவ்வாறு செய்திருக்க முடியும். ஆனால், இப்போது வரை 6 காவலர்களை மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

உள்ளூர் திமுகவினர் 50 லட்சம் வரை கொடுத்து இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றிருக்கின்றனர். திமுகவினர் யாருக்கும் சம்பந்தம் இல்லையெனில், ஏன் இப்படி சமரசம் செய்ய முயல்கிறீர்கள்?
காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாக இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதை விட முதல்வருக்கு என்ன வேலை?
திமுக அரசின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கையை இழந்துவிட்டனர். முதலமைச்சரால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சட்டத்துக்குப் புறம்பான கட்டப்பஞ்சாயத்தை காவல்துறையை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். திமுகவினர் காவல்நிலையங்களைத் தங்களின் கட்டப்பஞ்சாயத்துக் களமாகவே பயன்படுத்துகின்றனர்.
இதெல்லாம் முதல்வருக்குத் தெரியாமலா நடக்கிறது? மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில் எங்களையும் இணைத்துக் கொண்டு, தனிச்சிறப்பு விசாரணைப் படை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்.

முதல்வருக்கு எதன் மீதும் கவனம் இல்லை. அவர் குடும்பம் மற்றும் அதன் மீதான வழக்குகள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார். இந்த விவகாரத்தின் போக்கைப் பொறுத்து அடுத்தகட்ட போராட்டங்களை தலைவர் விஜய் அறிவிப்பார்" என்றார்.