Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்ந்ந்...து கொண்டே போகிறது.
நடுத்தர மக்களுக்கு இது எட்டாக்கனியாக மாறி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 5-10 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சண்முகநாதன்.
"2022-ம் ஆண்டில் இருந்தே, பொருளாதார காரணங்களினால், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.
இதைத் தடுக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, பலமுறை வட்டி விகிதத்தை உயர்த்திப்பார்த்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக, அப்போதும் டாலர் மதிப்பு உயரவில்லை.

அதிபரான ட்ரம்ப்
இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார் ட்ரம்ப். இது சந்தைக்கோ, டாலருக்கோ எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்க டாலரின் மதிப்பு முன்பை விட வேகமாக குறைய தொடங்கிவிட்டது.
அமெரிக்க டாலரின் மதிப்பு ஒருபக்கம் வேகமாக குறைந்து வருவதுபோல, இன்னொரு பக்கம், அது அமெரிக்க மக்களின் நுகர்வையும் பாதித்தது. இதை சரிகட்ட, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சமீபத்தில் 0.25 சதவிகித வட்டி குறைப்பை செய்தது. இன்னும் சில வட்டி குறைப்புகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
தங்கம் முதலீடு
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இந்த நகர்வு, இன்னமும் டாலர் மதிப்பை வீழ்ச்சியடையத் தான் செய்யும். இதனால், முதலீட்டாளர்கள் டாலரைத் தாண்டி, வேறு முதலீட்டைத் தேடுவார்கள்.
இந்த இடத்தில் தான் தங்கம் மாற்றாக வருகிறது. பொதுவாகவே, தங்கம் என்பது உலக அளவில் பாதுகாப்பான முதலீடு.
அமெரிக்க டாலர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்புகின்றனர். உலக நாடுகளின் வங்கிகளும் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது.

குறைக்கப்படும் வட்டி விகிதம்
எப்போதுமே வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, தங்கம் விலை அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருந்தால், தங்கம் விலை பெரியளவில் மாற்றம் இருக்காது.
ஆனால், இப்போது நிலைமையே வேறு. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியில் தான் உள்ளது. அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வைக் கருதி, வட்டி விகிதத்தைக் குறைக்கிறது அமெரிக்க ஃபெடரல் வங்கி. இதனால் தான், தற்போது தங்கம் அமெரிக்க டாலரைக் காட்டிலும் வலுவாகி, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
1970-ம் ஆண்டு...
1970-ம் ஆண்டு, இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்படும்போது, அப்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தி, முதலில் பணவீக்கத்தைத் தான் கட்டுக்குள் கொண்டுவந்தது.
அதனால், இப்போதும் குறுகிய கால வேலைவாய்ப்பைப் பார்க்காமல், அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்க வேண்டும். இதை அமெரிக்கா செய்யும்போது ஓரளவு தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

ஒருபுறம், உலக நாடுகளில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, வரிகள், பணவீக்கம் போன்றவை தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், தங்கம் மீண்டும் உலக அளவில் முக்கியத்துவம் பெறுவதே, இந்த விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம். இதை குறைக்க வேண்டுமானாலும், அமெரிக்க டாலரின் மதிப்பை பாசிட்டிவ் நகர்விற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
அப்படியில்லாமல், இதே நிலைமை நீடித்தால், இன்னும் 5-10 ஆண்டுகளில், ஒரு அவுன்ஸ் தங்கம் 30,000-40,000 டாலராக மாறலாம். அது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பின் படி பார்த்தால், கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தைத் தொடும்" என்று கூறுகிறார்.
அம்மாடியோவ்!