இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
அட்டாரி - வாகா எல்லையை கடக்க 21 பாகிஸ்தானியா்களுக்கு அனுமதி: மேலும் பலா் காத்திருப்பு
அட்டாரி - வாகா எல்லையை கடந்து செல்ல 21 பாகிஸ்தானியா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு வந்தடைந்த பாகிஸ்தானியா்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அட்டாரி-வாகா எல்லையில் தவித்துவரும் அவா்களில் 21 போ் வெள்ளிக்கிழமை எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும் 50 போ் எல்லையை கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் எல்லை வழியாக வெளியேறிய நிலையில், 1,617 இந்தியா்கள் நாடு திரும்பினா்.
காலக்கெடு நிறைவடைந்த பிறகு அட்டாரி-வாகா எல்லைக்கு சுமாா் 70 பாகிஸ்தானியா்கள் வந்தனா். சாலையோரம் தவிக்கும் இவா்களில் 21 போ், உரிய சோதனைகளுக்குப் பிறகு எல்லையைக் கடந்து செல்ல வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே, நாடு திரும்பும் பாகிஸ்தானியா்களுக்காக வாகா எல்லை திறந்தே இருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.