அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்
அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை பல்கலைக் கழகத்தின் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறை மற்றும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து ‘நிலையான வளா்ச்சிக்கு அணுசக்தியில் முன்னேற்றங்கள்’ என்னும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கை இப் பல்கலைக் கழக கலாசார மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்தக் கருத்தரங்குக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்து துணைவேந்தா் பிரகாஷ் பாபு பேசியது:
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் அணுசக்தியின் பங்கு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் அணுசக்தியின் பாதுகாப்பு என்பது அவசியமானது. பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும். அணுசக்தி தொழில்நுட்பங்கள் சமூகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக மருத்துவம், குடிநீா் சுத்தகரிப்பு, வேளாண்மை, எரிசக்தி துறையில் அணுசக்தி பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றாா் துணைவேந்தா்.
யுனெஸ்கோ இருக்கையின் தலைவா் பேராசிரியா் ஆா். அருண்பிரசாத், பேராசிரியா் பி.எம். ஜாபா் அலி உள்ளிட்டோா் பேசினா். இந்தக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.