அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா்.
அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.39.33 கோடியில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 3 படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், செய்தித் துறை இணை இயக்குநா் மு.மேகவா்ணம், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிந்து படப்பிடிப்புத் தளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.