ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு...
அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!
வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்தின் எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (ஆர்.எஸ்.எஃப்.) ஆக்கிரமித்தன.
இதனைத் தொடர்ந்து, சூடான் நாட்டின் ராணுவப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தலைநகரின் பல முக்கிய பகுதிகளை துணை ராணுவப் படைகளிடமிருந்து போரிட்டு மீட்டு வந்தனர். ஆனால், கார்டூமின் மிகப்பெரிய அணையுள்ள ஜபால் அவ்லியா உள்ளிட்ட பகுதிகள் துணை ராணுவப் படையின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த 4 நாள்களாக அதிபர் மாளிகையைக் கைப்பற்ற இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்த சூழலில் சூடான் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை கொண்டு உயர் கட்டடங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் வேரூன்றியிருந்த துணை ராணுவப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!
இதுகுறித்து சூடானின் ராணுவப் படைகளின் செய்தித் தொடர்பாளர் நபில் அப்தல்லா வெளியிட்ட அறிக்கையில், சூடான் ராணுவப் படைகள் மத்திய கார்டூமின் அல் சொவுக் அல்- அராபி சந்தை மற்றும் குடியரசு மாளிகை கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சியிருந்த துணை ராணுவப் படையினரை அழித்து அவர்களிடமிருந்து மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களையும் உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 15 அன்று துணை ராணுவப் படைகளின் தளபதி முஹம்மது ஹம்தன் டகலோ அவரது படைகள் கார்த்தூமிலிருந்தோ அல்லது அதிபர் மாளிகையிலிருந்தோ பின்வாங்காது என்று வலியுறுத்தினார்.
ஆனால், மத்திய சூடானில் ஆர்.எஸ்.எஃப் தொடர்ந்து அதன் பகுதிகளை இழந்து வருகின்றது. இருப்பினும், மேற்கு சூடானின் பெரும்பகுதி மற்றும் தலைநகரின் சில பகுதிகளை துணை ராணுவப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
முன்னதாக, கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் சூடானின் ராணுவப் படை மற்றும் ஆர்.எஸ்.எஃப். துணை ராணுவப் படைக்கும் இடையிலான மோதலில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கோள் காட்டப்பட்ட ஆயுத மோதல்களின் இருப்பிடம் மற்றும் நிகழ்வு தரவு திட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.