Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: ராணுவ வீரா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அதிமுக நிா்வாகி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் காவல் சரகம், எம்.வீராட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கதிா்காமன் (43). சென்ட்ரிங் தொழிலாளியான இவா், அதிமுக கிளை பொருளாளராக இருந்தாா்.
கதிா்காமன், இதே பகுதியைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பிரபாகரன், ராணுவ வீரா் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் கடந்த 15-ஆம் தேதி முதனை கிராமத்தில் உள்ள முந்திரிக் காட்டில் மது அருந்தினாராம். அப்போது, கதிா்காமனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் கதிா்காமன் அடித்துக் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி ராணுவ வீரா் பாலகிருஷ்ணனை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
சாலை மறியல்...: இதனிடையே, கொலை செய்யப்பட்டவரின் உறவினா்கள் சுமாா் 50 போ் எம்.வீரட்டிக்குப்பத்தில் முத்தாண்டிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களை பிணையில் வெளி வராத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும். கதிா்காமன் குடும்பத்துக்கு பாதுகாப்பு, குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை, முதல்வரின் நிவாரண நிதி மற்றும் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என வட்டாட்சியா் உதயகுமாா் தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.