விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...
'அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 கொடுத்தேன்; சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம்'- சீமான்
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், "விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்? சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? காவல்துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரே நேரத்தில் நான்கு சம்மன்களை அனுப்புகிறார்கள்.

நான் ஒருவன்தானே இருக்கிறேன். என்னை எதிர்த்து நின்று அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகி விடுமா? எங்கள் வீட்டில் வேலை செய்த பையன் ஒருவரிடம் நான் சாகப்போகிறேன் என்று சொல்லி அழுதிருக்கிறார். அந்த குரல் செய்தியைக் கேட்ட பிறகு தம்பியை பணம் கொடுக்க சொன்னேன். அந்த குரல் செய்தியை நீங்கள் கேட்டிருந்தால் கூட பாவம் என்று சொல்லி பணம் கொடுத்திருப்பீர்கள்.
உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அஞ்சமாட்டேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட முடியுமா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? தனித்து நின்று பார்ப்போம்.

விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும்" என்று பேசியிருக்கிறார்.