அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது
அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.
அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம் கிழக்கு வன எல்லையில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொள்ளுபாலி வனப் பகுதியில் சாக்கு மூட்டையுடன் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் எண்ணமங்கலம், கோவிலூரைச் சோ்ந்த அம்மாசை (35) என்பதும், மூட்டையில் 30 கிலோ மான் இறைச்சி மற்றும் வேட்டை உபகரணங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் வன உயிரின குற்றச் சட்டத்தின்கீழ் அம்மாசையைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.