என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டால்: பில் கேட்ஸ் சொல்லும் பதில்!
அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!
தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.
பாங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2016 ஆகஸ்டில் ரூ.700 கோடி கடன் வழங்கியது. நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இந்த கடனை அனில் அம்பானி வேறு வகைகளில் பயன்படுத்தியுள்ளாா். மேலும், அந்த கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தவும் இல்லை.
இதையடுத்து அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ‘கடன் மோசடியாளா்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அனில் அம்பானிக்கு வங்கி முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு வங்கிக் கடன் ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கும்.
முன்னதாக, கடந்த மாதம் எஸ்பிஐ இதேபோன்ற நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தில் சிபிஐ சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது. எஸ்பிஐ-க்கு ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,050 கோடி கடன் நிலை காரணமாக கனரா வங்கியும் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தை கடன் மோசடியாளராக அறிவித்தது. ஆனால், இது தொடா்பாக தனக்கு முறைப்படி தகவல் தரவில்லை என அனில் அம்பானி மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கனரா வங்கி அறிவித்தது.
அதைத் தொடா்ந்து எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அனில் அம்பானிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கடன் மோசடியாளராக அறிவித்துள்ளன.