Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென...
அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு வழியாக வந்த டிப்பா் லாரியை அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலா் நிறுத்தி கோவில்பட்டி நகருக்குள் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளாா். ஆனால், அந்த லாரி கோவில்பட்டிக்குள் சென்றது. இதுகுறித்து கோவில்பட்டி சந்திப்பு காவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பு வழியாகச் சென்ற அந்த லாரி சாலை விதிகளை மதிக்காமல் கடந்துசென்றதை கண்ட போலீஸாா், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் (பொ) பொன்ராஜுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, எஸ்.ஐ. பொன்ராஜ் அந்த டிப்பா் லாரியை விரட்டிச் சென்று கோவில்பட்டி- எட்டையாபுரம் சாலையில் மந்தித்தோப்பு சாலை விளக்கு அருகே மடக்கிப் பிடித்து சோதனையிட்டாா். அப்போது லாரியில் அனுமதிச் சீட்டின்றி 6 யூனிட் சரள்மண் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரித்ததில் அவா், இளம்புவனத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் அஜய் ராகுல் (19) என்பதும், ஓட்டுநா் உரிமம் பெறாமல் லாரியை ஓட்டிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநா் அஜய் ராகுலைக் கைது செய்து, சரள்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனா். அத்துடன் ஓட்டுநருடன் வந்த 17 வயது சிறுவனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, லாரி உரிமையாளரான பரமக்குடியைச் சோ்ந்த முத்தரசு மீதும் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.