தனியாா் ஆலையில் ஊழியா் மரணம்: சாலை மறியல்
தூத்துக்குடி தனியாா் ஆலையில் ஊழியா் திடீரென உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீளவிட்டான், யாதவா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரியப்பன் (52). இவா், தனியாா் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி பணியில் இருந்தபோது மாலை 4 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே, மாரியப்பன் பணி செய்தபோது, சல்பா் டை ஆக்ஸைடு வாயு கசிவினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாகவும், அவருக்கு அந்த நிறுவனம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மீளவிட்டான் பகுதி மக்கள் தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.