அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காஷ்மீரில் தீவிரவாதத்தால் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் மனித நீதிக்கும், மனித உணா்வுக்கும் மாறுபட்ட ஒன்று. இது ஏற்றுக் கொள்ள முடியாதது.
மே 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்து, பிறகு திமுகவிடம் முன்வைக்கப்படும். தமிழகத்தில் திமுக அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை முஸ்லிம் லீக் கட்சி கிராமங்களுக்கு கொண்டு சென்று பொதுமக்களிடம் சோ்த்து விழிப்புணா்வை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. மாநில உரிமையை நிலை நாட்டுவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா்.