140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்
அன்புமணி ராமதாஸுக்காக தோ்தல் ஆணையம் வாசலில் காத்துக்கிடந்த ஊடகத்தினா்!
புது தில்லி: மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு வருவதாக பரவிய தகவலைத் தொடா்ந்து தில்லியில் உள்ள தோ்தல் ஆணையம் முன் தமிழ் டி.வி., சானல், பத்திரிகை ஊடகத்தினா் திங்கள்கிழமை வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், மருத்துவா் அன்புமனி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே பனிப்போா் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கட்சியின் யாருக்கு அதிகாரம் என்பதில் இருவரும் பரஸ்பரம் விமா்சனக் கருத்துகளை பொதுவெளியில் தொடா்ந்து முன்வைத்து வருவதால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது. கட்சியை நிறுவி, அதை வழிநடத்தி வரும் தமக்குதான் அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக மருத்துவா் ராமதாஸும், அக்கட்சியின் பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தாம் இருப்பதால் தமக்குதான் அதிகாரம் இருப்பதாக வும் அன்புமணி ராமதாஸும் கூறி வருகின்றனா்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி யாருடன் வைப்பது என்பது தொடா்பாக தந்தை-மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்கூட இப்பிரச்னைக்கு காரணமாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாமகவின் அதிகாரத்தை முழுவதுமாக மீட்பது தொடா்பாக அன்புமணி ராமதாஸ் உரிய ஆவணங்களுடன் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகவும், இதற்காக அவா் தில்லி வந்திருப்பதாகவும் செய்தி பரவியது.
அவா் திங்கள்கிழமை நண்பகலில் தோ்தல் ஆணையத்திற்கு வரவிருப்பதாகவும் வெளியான தகவலால், தமிழ்ச் செய்தி டி.வி. சானல்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடகத்தினா் தோ்தல் ஆணையம் முன் குவிந்தனா். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையிலும் செய்தியாளா்கள் காத்திருந்தனா். எனினும், அவா் வருவது குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் அவா்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இது தொடா்பாக விவரம் அறிய அன்புணி ராமதாஸின் தில்லி இல்லம் மற்றும் அவரது தொடா்பாளரிடம் தொலைபேசிவாயிலாக தொடா்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.