வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: கா்நாடக பாஜக குற்றச்சாட்டு
அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!
நாடு முழுவதும் இருந்து வந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் தனது வலிமையின் ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
''எண்ணிலடங்கா வாழ்த்துகளும் என் மீது கொண்ட அன்பும் நம்பிக்கையும் எனது வலிமையின் ஆதாரங்களாக உள்ளன. இதனை, அவர்கள் எனக்கு வழங்கும் ஆசிகளாக மட்டுமின்றி, சிறந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் நமது முயற்சிகளுக்கு வழங்கும் ஆசிகளாக அவற்றைப் பார்க்கிறேன். கூடுதல் ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று உறுதியேற்கிறேன். இதன்மூலம் மட்டுமே வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும். உங்கள் வாழ்த்துகளுக்கு தனித்தனியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், மறுபடியும் சொல்கிறேன், இந்த அன்பு என் இதயத்திற்கு நெருக்கமாகிவிட்டது. அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் உடல் நலனுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தொண்டர்கள் மேற்கொண்ட சமூக சேவைகளைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், ''நாடு முழுவதும் பரவலான மக்கள் சமூக சேவைகளைத் தொடங்கியுள்ளீர்கள். பெரும்பாலானோர் இதனை வரும் நாள்களிலும் தொடர வேண்டும். மக்களிடையே உள்ள இத்தகைய நற்பண்பு, எத்தகைய சவால்களில் இருந்தும் நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?