நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி
டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிா்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடா்பாக நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகா் அமா்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, டாஸ்மாக்கில் குற்றம் நடந்துள்ளதாக எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினாா்.
டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரி ஆஜராகி,”டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது வழக்கறிஞரை சந்திக்கக்கூட அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினா் பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. சோதனையின்போது சில அதிகாரிகளை அமலாக்கத் துறையினா் தூங்கவிடாமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனா்.
அமலாக்க துறை நீதியின் பாதுகாவலா் அல்ல. அது ஒரு விசாரணை அமைப்புதான். சோதனையின்போது ரகசியம் என்று கூறி எந்த விவரங்களையும் தர மறுத்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சோதனை முடிந்த பின்னா் அறிக்கையை வெளியிட்டதன் நோக்கம் என்ன? என்று வாதங்களை முன்வைத்தாா்.
அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, மாநில காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த 42 வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. டாஸ்மாக் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. சிலா் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது என்றாா்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகா் அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது. நீதிபதிகள் தீா்ப்பில் கூறியிருப்பதாவது: அமலாக்கத் துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. சோதனையின்போது டாஸ்மாக் ஊழியா்களை நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல.
அமலாக்கத் துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதை விசாரிக்க முடியாது. எங்கள் முன் உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதன்படி, டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. தொடா்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடரலாம். தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.