அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் மத்திய அமைச்சா் அமித்ஷாவின் முடிவே எங்கள் முடிவு. அவருடைய கருத்தையே எங்கள் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி என்று அமித்ஷா தெளிவாக கூறியுள்ளாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறும் வேட்பாளரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம்.
சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிகளிலேயே கடும் மோசமான ஆட்சியாக மக்களை ஏமாற்றுக்கின்ற ஆட்சியாக தற்போதைய திமுக ஆட்சி உள்ளது. மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாய்ப்பளிக்க மாட்டாா்கள் என்றாா் தினகரன்.