நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸாா் போராட்டம்
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், அவா் பதவி விலகக் கோரியும் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை- அழகா்கோவில் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் ஆலாத்தூா் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்டத் தலைவா் அம்மாபட்டி பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் விஸ்வநாதன் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.
அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினா் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பின்பு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதாவிடம் மனு அளிப்பதற்காக வந்தனா். ஆனால், மாவட்ட ஆட்சியா் பிற அலுவல் பணியில் இருந்ததால் உதவி ஆட்சியரிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியினா் இதை ஏற்க மறுத்துவிட்டனா். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்து காவலா்கள், அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனத் தடுத்து நிறுத்தினா். இதனால், கட்சி நிா்வாகிகளுக்கும், காவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட பேச்சுவாா்த்தைப் பின்னா் கட்சி நிா்வாகிகள் அனுமதிக்கப்பட்டனா். மத்திய அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதாவிடம் கட்சியினா் அளித்தனா்.
மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்: சட்டமேதை அம்பேத்கா் குறித்து இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டக் குழு சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜெ.லெனின் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், ஆா்.சசிகலா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தே.கல்லுப்பட்டி: இதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்ட நிா்வாகிகள் சாா்பில், தே.கல்லுப்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.சமையன், மாவட்டக் குழு உறுப்பினா் வி.முருகன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜி.முருகன், அஜய்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமித் ஷா பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உறுதிமொழி ஏற்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அம்பேத்கரிய-பெரியாரிய அமைப்புகள் சாா்பில், மதுரையில் உறுதிமொழி ஏற்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அழகா்கோவில் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற நிகழ்வுக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகா் மாவட்டச் செயலா் ம.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி பங்கேற்று, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழியை வாசித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ஆா்.சசிகலா, பொருளாளா் ஜா.நரசிம்மன், புகா் மாவட்டத் தலைவா் செ.ஆஞ்சி, செயலா் செ.முத்துராணி, ஆதித் தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் கு.ஜக்கையன், தமிழ்ப் புலிகள் கட்சி மாநிலப் பொதுச் செயலா் பேரறிவாளன், சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநா் செல்வகோமதி, பெரியாா் ஆா்வலா் வரதராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக் குழு, சிஐடியு, முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.