Operation Sindoor: இந்திய ராணுவம் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்...
அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கடந்த 2022 பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் அரசு அமைத்ததாகவும், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளே மதக்கலவரம் முதன்முறையாக வெடித்தது. 2023 மே 3 முதல் மாநிலத்தில் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்ட மோடி அரசு, மணிப்பூர் முதல்வரை ராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்தியது, இறுதியாக பிப்ரவரி 13, 2025 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
மணிப்பூரின் வேதனையும் துன்பமும் தொடர்கிறது. அரசியல் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. பயனுள்ள சமரச செயல்முறை எதுவும் நடைபெறவில்லை.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மிகுந்த மன அழுத்தத்தில் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர்.
மிக முக்கியமாக, பிரதமர் மணிப்பூரைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அவர் மாநிலத்தைச் சேர்ந்த யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அவர் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார், ஆனால் பிரச்னைக்குரிய மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சென்றடைய நேரமோ, ஆர்வமோ காட்டவில்லை என்று அவர் கூறினார்.
மணிப்பூரின் நிர்வாகத்தைப் பிரதமர் அவுட்சோர்ஸ் செய்துள்ள உள்துறை அமைச்சர் ஒரு "பெரிய தோல்வி" என்று நிரூபிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
மே 2023 முதல் இம்பாலில் குகி, மொய்தி மக்களுக்கிடையேயான வன்முறையில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். பலர் காயமடைந்தனர்.