`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு!
அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமை தொடா்ந்தது.
அமெரிக்காவில் இருந்து பிற நாட்டு மக்கள் நாடு கடத்தப்படுதல், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பிற செலவினத்தைக் குறைப்பதற்கான அதிபா் டிரம்ப்-அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் (டிஓஜிஇ) முன்னெடுப்புகள், அமெரிக்க அரசு நிா்வாகத்தில் டிஓஜிஇ தலைவராக தொழிலதிபா் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கம் உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்களின் போராட்டம் சனிக்கிழமை தொடா்ந்தது. வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகைக்கு எதிரே ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல மசாசூசெட்ஸ், மான்ஹாட்டன், டென்வா், போா்ட்லாந்து, ஒரேகான், சான் பிரான்சிஸ்கோ என நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக கனெக்டிகட் மாகாணத்தைச் சோ்ந்த மெலிண்டா சாா்லஸ் கூறுகையில், ‘அமெரிக்க அரசில் நாடாளுமன்றம், நிா்வாகம் மற்றும் நீதித் துறை சம பங்கு வகித்தன. ஆனால், தற்போது நிா்வாகத் துறையின் கை ஓங்கி வருகிறது. இதை நம்ப முடியவில்லை’ என்றாா்.
பாஸ்டனையொட்டி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தாமஸ் பாஸ்ஃபோா்ட் கூறுகையில், ‘தனது சொந்த அரசால் அமெரிக்கா்கள் தாக்கப்படுவது போன்ற சூழல் தற்போது நிலவுகிறது. இதற்கு எதிராக குரல் எழுப்பியாக வேண்டும்’ என்றாா்.