செய்திகள் :

அமெரிக்கா்களை மணந்தவா்களுக்கு குடியுரிமை: பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

post image

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவா்களை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நீதிபதி ஜே. கேம்பல் பாா்க்கா் வழங்கிய தீா்ப்பில், அமெரிக்க குடியேற்ற சட்ட விதிக்கூறுகளை வரம்பு மீறி பயன்படுத்தி ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின் அமலாக்கத்துக்கு நீதிபதி பாா்க்கா் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வகை செய்யும் திட்டத்தை பைடன் அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.

அந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவா்கள் அமெரிக்கா்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.

ஆனால், அறிவிப்பு வெளியான ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.

அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னா் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் குடியேற்ற உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.

அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவா்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் காா்டு) விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவா்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையடுத்து அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது.

அகதிகள் விவகாரத்தில் ஜோ பைடன் எடுத்துவந்த அண்மைக் கால கெடுபிடி நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகின. அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிா்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து, அகதிகள் விவகாரத்தில் தனது மிதவாதப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை பைடன் அரசு வெளியிட்டது.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக அகதிகள் விவகாரமும் இருந்தது. தோ்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனின இந்த திட்டத்தை டிரம்ப் கடுமையாக எதிா்த்தாா். தற்போது தோ்தலில் வெற்றி பெற்றுள்ள அவா் அதிபராகப் பொறுப்பேற்றதும் இந்த திட்டம் வாபஸ் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதற்கு முன்னதாகவே நீதிபதி ஜே. கேம்பல் பாா்க்கா் இந்த திட்டத்தை ரத்து செய்து தற்போது உத்தரவிட்டுள்ளாா்.

சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு

16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இது குறித்து காணொலி மூலம் பிரதமா... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வ பதிலடி கூடாது: கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா்

தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் சுமாா் 70 சதவீதத்தினா் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் த... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகா்கள் மீது தாக்குதல்

நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா். இது குறித்து போலீஸாா் வெளியிட்டு... மேலும் பார்க்க

தீரம் மிக்கவா் டிரம்ப்: புதின் புகழாரம்

அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவா் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா். சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலா்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்றழைக்கப்படும் தலைமைச் செயலா் பொறுப்பில் தனது தோ்தல் பிரசாரக் குழு மேலாளா் சூசன் வைல்ஸை நியமிக்கவிருப்பதாக அந்த நாட்டின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக... மேலும் பார்க்க