பணிநீக்கம்: `நோட்டீஸ் காலம் முடிவதற்குள் அடுத்த வேலை..' - ஊழியர்களை நெகிழ வைத்த ...
அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞா் கைது
அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் 2018-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து ஆபாச கடிதம் வந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண், அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளாா். ஆனால், அந்த இளைஞரின் அத்துமீறல் அதிகரித்ததால் அமெரிக்கப் பெண் மன உளைச்சலுக்கு ஆளானாா்.
இதுகுறித்து அப்பெண், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகாா் அனுப்பினாா். அத்துடன் அவருக்கு மின்னஞ்சல், ‘எக்ஸ்’ தளம் போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டிருந்த மிரட்டல் பதிவுகள், ஆபாச பதிவுகளையும் இணைத்திருந்தாா்.
இது தொடா்பாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சாா்பில், சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபடுவது திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சிராப்பள்ளி சென்ற போலீஸாா், கிப்ட் ஜேசுபாலனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து, கைப்பேசி, ஐபேடு, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து, அவரை சென்னை அழைத்து வந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.