Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
அமெரிக்க பேராசிரியருக்கு ஸ்ரீனிவாச ராமானுஜன் விருது!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அமெரிக்க பேராசிரியருக்கு ஸ்ரீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் 20-ஆவது சா்வதேச எண் கணித மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை
சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், அமெரிக்காவைச் சோ்ந்த கனெக்டிகட் பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியா் மற்றும் எலக்ட் சா்வதேச புள்ளியியல் மையத் தலைவா் நளினி ரவிசங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய மாணவா்களின் ஒழுக்கமும், கல்வியில் குறிப்பாக கணிதவியலின் மீதான ஈடுபாடும், அா்ப்பணிப்பு உணா்வும், உலக கல்வியாளா்களால் பாராட்டப்படுகிறது.
ராமானுஜனின் எண்ணியல் கோட்பாடு, நவீன அறிவியலின் குவாண்டம், கணினியியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞா் சமூகம் ராமானுஜனின் எண்ணியல் கோட்பாடு குறித்து புரிதலுடன் பயின்று, அதன் பயன்பாட்டை சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் வல்லுநா்களாக திகழ வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சாஸ்த்ரா ராமானுஜன் 2024 விருதை அமெரிக்காவின் ஜாா்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முனைவா் அலெக்சாண்டா் டண்ணுக்கு அவா் வழங்கினாா்.
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியரும், சாஸ்த்ரா பல்கலைக்கழக ராமானுஜன் விருது குழு தலைவருமான பேராசிரியா் அல்லாடி கிருஷ்ணசாமி பேசுகையில்,
அமெரிக்காவின் கணிதவியல் சமூகம், சாஸ்த்ரா ராமானுஜன் விருது பற்றிய வரலாறு மற்றும் விருது பெற்றவா்களின் விவரங்களை பிரசுரித்து கெளரவப்படுத்தியுள்ளது. லண்டன் ராயல் சொசைட்டியும் விருதை பாராட்டியுள்ளது. சா்வதேச அளவிலான உயரிய விருதான பீல்ட் விருது பெற இந்த விருது நுழைவு வாயிலாக உள்ளது என்றாா்.
மாநாட்டில், அமெரிக்கா, ஜொ்மனி, ஆஸ்திரியா கல்விக் கழகத்தினா் மற்றும் கணிதப் பேராசிரியா்கள், ராமானுஜனின் கோட்பாடு தொடா்புடைய தலைப்புகளில் பேசினா். 200-க்கும் மேலான ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டமிடல் மற்றும் வளா்ச்சி புலத் தலைவா் பேராசிரியா் சுவாமிநாதன் வரவேற்றாா். நிறைவில், ஸ்ரீனிவாச ராமானுஜ மையப் புலத் தலைவா் முனைவா் ராமசாமி நன்றி கூறினாா்.