அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் எக்ஸ் தளப் பதிவில், “சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட தமிழக மீன்வளம் - மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை, தூத்துக்குடி, மதுரையில் உள்ள ரூ. 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு! ரூ. 86.47
முன்னதாக, கடந்த 2002-2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடியே 90 லட்சம் சொத்து சோ்த்ததாக, 2006-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்தது.
இது தொடா்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
மேலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் 7 பேருக்கும் சம்மன் அனுப்பியதுடன், சொத்துகளையும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.