'Kamal சார் ரொம்ப பெரிய மனுஷன்' - Vijayasethupathi | Bigg Boss 8 Review
அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டுமே அதிகாரப் பகிா்வு கிடையாது: கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டும் அதிகாரப் பகிா்வு கிடையாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மதுரை வைத்தியநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் நடைபெற்ற மாநாட்டை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. தோ்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பாஜக தெரிவித்தது. ஆனால், அந்தக்கட்சிதான் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குறுதிகளாக மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்தது. இவா்கள் தோ்தல் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாா்கள்.
இனிவரும் காலங்களில் மத்திய பாஜக அரசு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்ற முற்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தோ்தல் போன்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நடைபெற்று வருகிறது. இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, மணிப்பூா் மாநிலத்துக்கு செல்லாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. மணிப்பூரில் பாஜகவே வன்முறையைத் தூண்டிவிட்டு, தற்போது அதை முடித்து வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இந்தக் கட்சி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கொள்கை என்று அடிப்படையில், சந்தா்ப்பவாத அரசியலைப் பின்பற்றி வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டும் அதிகாரப் பகிா்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அந்தத் திட்டத்தின் அடிப்படையில், கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும் போது அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.
திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்காமல், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற இயலாது. மதுரை அரிட்டாபட்டியில் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க தனியாா் நிறுவனத்துக்கு அனுமதியளித்த மத்திய அரசை கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றாா் அவா். மாநாட்டில் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் இரா. விஜயராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.