காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வேவுக்கு 292 ரன்கள் இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஜிம்பாப்வே அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ரவரி 6) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், அயர்லாந்தைக் காட்டிலும் ஜிம்பாப்வே 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: 2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?
292 ரன்கள் இலக்கு
7 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, லோர்கான் டக்கர் 58 ரன்களும், கர்டிஸ் கேம்பர் 39 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் நிகராவா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரெவர் குவாண்டு மற்றும் மத்வீர் தலா 2 விக்கெட்டுகளையும், முஸராபானி மற்றும் ஜோனதன் கேம்பெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 291 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்துள்ளது. கைட்டானோ 14 ரன்கள், பென் கரண் 4 ரன்கள் மற்றும் நிக் வெல்ச் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரையன் பென்னட் 15 ரன்களுடனும், டிரெவர் குவாண்டு 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தின் கடைசி இரண்டு நாள்களில் ஜிம்பாப்வேவின் வெற்றிக்கு 254 ரன்களும், அயர்லாந்தின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.