மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பிற பகுதிகளில் சமீப காலமாக இந்தியா்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. டப்லின் புகா் பகுதியில் கடந்த ஜூலை 19-ஆம்தேதி 40 வயது இந்தியா், உள்ளூா் நபா்களால் கொடூரமாக தாக்கப்பட்டாா். இச்சம்பவத்தைக் கண்டித்து, இந்தியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த வார தொடக்கத்தில் மேலும் ஒரு இந்தியா் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானாா். இதையடுத்து, இனவெறி தாக்குதலைத் தடுக்க இரு நாட்டு அரசுகளும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், டப்லினில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அயா்லாந்தில் இந்தியா்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. அதேநேரம், இந்தியா்கள் தங்களின் பாதுகாப்புக்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு-அதிகாலை நேரங்களில் ஆள் அரவமற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். அவசர உதவிக்கு 0899423734 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.