அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதக் காலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களால் மாநகராட்சி நிர்வாகம் புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் காலணிகளை கோயிலின் நுழைவுவாயிலிலேயே விட்டுச் செல்கின்றனர்.
கோயிலில் எங்குப் பார்த்தாலும் காலணிகளாகவே உள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட காலணிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் தான் என்ன என்று அதிகாரிகள் விசாரித்ததில் கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுவதாவது,
மகா கும்பமேளாவைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் திரளானா பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் ராமர் கோயிலின் முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். அதன்பின்னர் கோயிலைச் சுற்றிப்பார்த்து தரிசனம் முடித்த பிறகு சுமார் அரை கி.மீ நடந்து சுற்றுப்பாதையை முடிக்கின்றனர். மீண்டும் தங்கள் காலணிகளைச் சேகரிக்க அதே முதல் நுழைவுவாயிலுக்கு வரவேண்டிய சூழல் நிலவுகிறது.
பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதால், ராமரை தரிசித்துவிட்டு பக்தர்கள் மூன்றாவது நுழைவுவாயிலில் வெளியேறுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தங்கள் காலணியைச் சேகரிக்க மீண்டும் ராமர் வழித்தடத்தில் அதாவது சுமார் 5 - 6 கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதுவே லட்சக்கணக்கான காலணிகள் குவிந்ததற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் நுழைவுவாயில் மாற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறினார். தினமும் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகளை ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி காலணி குவியலை அகற்றி டிராலிகளில் ஏற்றி வருவதாகவும் அவர் கூறினார்.