'அரசியல்ல இருந்தா இருந்துட்டு போ செத்த பயலே..!' - கொதிக்கும் ஜி.பி.முத்து என்ன சொல்கிறார்?
வடிவேலு ஒரு படத்தில் 'கிணத்தைக் காணோம்' என புகார் தருவாரே, அந்த டைப்பில் தனது வீடு அருகே இருந்த 'தெருவைக் காணோம்' என போலீஸில் புகார் தந்திருகிறார் யு-டியூப் + பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து
என்ன நடந்தது? அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.
''அண்ணே உடன்குடி பெருமாள்புரத்துல என்னுடைய் வீடு இருக்கு. நான் தம்பிங்க என கூட்டுக் குடும்பமா வாழ்ந்துட்டு வர்றோம். எங்க வீட்டுக்கு முன்னாடி உச்சி மாகாளி அம்மன் கோவில் ஒண்ணு இருக்கு. ஊர்க்கோவில். எங்க குடும்பமும் வரி கொடுக்குது.
கோவிலுக்கு ரெண்டு புறமும் பாதை இருக்கு. அந்தப் பாதைதான் எங்க வீட்டுல இருந்து தெருவுக்குப் போற பாதை. ரெண்டு பாதையில் ஒரு பாதைக்கு கீழத் தெருன்னுதான் பேரு. கொஞ்ச நாள் முன்னாடி பதிவுத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரும், தேசிய கட்சியில இருக்கிற ஒருவரும், இன்னும் சிலரும் சேர்ந்துகிட்டு கோவிலை விரிவாக்கம் செய்றோம்னு அந்தப் பாதையில் கட்டுமானத்தைத் தொடங்கினாங்க.

பாதை அடைக்கபட்டிடுச்சு..!
இவங்க கட்டுமானத்தால் 15 அடி அகலம் கொண்ட அந்தக் கீழத்தெரு 8 அடியாச் சுருங்கிடுச்சு. அதனால் என் வீட்டுல இருந்து வெளியில் வர்ற பாதையும் அடைக்கபட்டிடுச்சு.
பஞ்சாயத்துல போய் புகார் தந்தேன். அவங்க வந்து கட்டுமானத்தை நிறுத்தச் சொல்லிட்டாங்க. உடனே குறிப்பிட்ட அந்த ஆளுங்க அடியாட்களை அனுப்பி என் வீட்டுல இருக்கிறவங்களை மிரட்டத் தொடங்கினாங்க. நான் ஷூட்டிங் போயிட்டா வீட்டுல இருக்கிற பொம்பளைங்களை அசிங்கமாப் பேசித் திட்டறது தொடர்ந்து நடக்குது. அதுவும் ஞாயித்துக் கிழமை ஆனா ஷெட்யூல் போட்டு ஒவ்வொரு வாரமும் வந்துடுறாங்க.
அதனாலதான் கலெக்டர் ஆபீஸ் உடபட எல்லா இடத்துலயும் மனு கொடுத்தேன்.
இப்ப விசாரணையில கடைசியா அந்தக் கோவில் இருக்கிற இடமே புறம்போக்குனு சொல்லிட்டாங்க. நான் குறிப்பிட்ட அந்த பதிவுத்துறையில் வேலை பார்த்த பார்ட்டி போலி பத்திரங்கள் தயார் பண்ணி மோசடி செய்து இந்த இடங்களை அபகரிக்கப் பார்க்குறாங்க.

அரசியல்ல இருக்கிற ஆள், இப்ப பிரச்னையை வேற ரூட்டுக்கு திருப்பி விடப் பார்க்கிறார். அதாவது நான் கோவிலுக்கு எதிரா செயல்படுறேன்னு கிளப்பி விடறார். அவர் பேச்சைக் கேக்க நாலு பேரு இருப்பாங்க இல்லையா., அவங்கதான் என் வீட்டை முற்றுகையிட்டது. 'செத்த பயலே அரசியல்ல இருந்துட்டு போ அதனால் எனக்கென்ன'ன்னு என் ஸ்டைல்ல வஞ்சு விட்டுட்டேன்' எனக் குமுறினார் முத்து.
மேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவும் தயாராகி விட்டாராம் முத்து.