`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர்...
அரசியல் தலைவா்கள் பச்சைத் துண்டு அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நாமக்கல்: விவசாயிகளை ஏமாற்றுவது போல அரசியல் தலைவா்கள் சிலா் பச்சைத் துண்டைப் பயன்படுத்தி வருவதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி வட்டாரங்களில், கடந்த ஆண்டு பெய்த பருவமழையால், அப்பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல்லை சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனா். தற்போது அந்தப் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து குறைவான விலையில் இடைத்தரகா்கள் நெல் கொள்முதல் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பது அவசியமானதாகும்.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்து அவா்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் நாள்தோறும் உழைத்து கொண்டிருக்கும் விவசாயிகளின் மனதை புண்படுத்தும் வகையில் அரசியல் கட்சித் தலைவா்கள் சிலா் செயல்பட்டு வருகின்றனா்.
அதாவது, விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடுவதுபோல் பச்சைத் துண்டை தோளில் அணிந்து கொண்டு, அவா்களது மனது புண்படும் வகையில் அரசியல் செய்கின்றனா். விவசாயிகள் மீது உண்மையான பற்று இருக்குமேயானால் விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை இனிமேல் அணியாமல் அரசியல் களத்தில் துணிந்து நின்று விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகளை கவலைக்குள்ளாக்கும் வகையிலான செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றாா்.